Rock Fort Times
Online News

மும்பை தொழிலதிபரை ஏமாற்றி 20 லட்ச ரூபாய் பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு

திருமணம் செய்ததை மறைத்து மும்பை தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் வசிப்பவர் ராஜேஷ் (44). இவர் அதே ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் .கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.அதன் பின்பு லோரேனின் அறிமுகத்தில் அவரது சகோதரி ஹேசல் ஜேம்ஸ்-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ராஜேஷ் ஹேசலுக்கு நண்பர் ஆனார்.

அதன் பின் கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ்ம் , ராஜேஷும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
அதேபோல ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேஷ் உடன் பழகி வந்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறினார். பின்னர் மீண்டும்
கணவன் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கிறது என தெரிவித்து
90 ஆயிரம் ரூபாயை கடனாக ராஜேஷ் இடமிருந்து பெற்றுள்ளார்.

தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜேஷ்
20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி ஹேசலுக்கு கொடுத்துள்ளார்.இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ்க்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ், ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.அதன் பிறகு தொடர்பு கொண்ட ராஜேஷ் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் தான் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்து போன ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் கழித்து தனது பணத்தை கேட்டுள்ளார்.அப்போது ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார்.

இதனால் ராஜேஷ் கோவைக்கு வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் ஹேசல் ஜேம்ஸ் பலரிடம் திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ்-ஐ ஏமாற்றி பழகி பணம் பறித்தது தொடர்பாகவும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும்
ஹேசல் ஜேம்ஸ் மீது 420,406,506(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்