திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் நல மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனைகள் தமிழ்நாடு முதல்- அமைச்சரால் தீரமானிக்கப்பட்டு 25.06.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 13 மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 623 மாணவர்களில் 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89 சதவீதம். மாநில அளவில் இத்துறை மாணவர்கள் 91.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்துறையில் உயர்கல்வி செல்லும் மாணவர்கள் துறைசார்ந்த படிப்புகளுக்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை பெற வாய்ப்புகள் உள்ளது என்பது பற்றியும், எந்த பாடப்பிரிவினை தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றியும் தன்னார்வ குழுவினரால் விரிவாக வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர், திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை முன் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய சிசிடிவி உள்ளது. மின்தடை ஏற்பட்டாலும் தானியங்கி ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி கொடுக்கப்பட உள்ளது. ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை ஒதுக்கப்படும். ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகளும், ஒவ்வொரு மேஜைக்கும் 4 நபர்களும் இருப்பார்கள். தபால் வாக்குகளுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றார். இந்நிகழ்வில், திட்ட ஆலோசகர் ஆதிதிராவிடர் நலத்துறை ராஜாஜெகஜீவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் தவச்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.