Rock Fort Times
Online News

சிறை தண்டனையில் இருந்து விலக்கு கோரிய முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனு தள்ளுபடி

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். “காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயர் அதிகாரி தான்” எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, ராஜேஷ் தாஸுக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகார் அளிக்கப்படதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்