திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோவில்களுக்கு பேருந்து…!
இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கிறிஸ்தவர்களின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்று புனித வேளாங்கண்ணி மாதா கோவில். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதா விடம் பிரார்த்தனை செய்து செல்கின்றனர். அதேபோல, தஞ்சை மாவட்டம் திருக்காட்டு பள்ளியில் புனித லூர்து மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி, பூண்டி மாதா பேராலயங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். பொதுவாக வேளாங்கண்ணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்துதான் பஸ்கள் புறப்பட்டு செல்லும். இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கோரிக்கையை ஏற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மக்களின் பயன்பாட்டிற்காக உறையூர் ,பாலக்கரை, பூண்டி மாதா கோவில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை செல்லும் அரசு பேருந்தை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் டிக்கெட் எடுத்து சிறிது நேரம் பயணம் மேற்கொண்டார். இந்த புதிய பேருந்து தினமும் காலை 6-30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு உறையூர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் சென்றடையும். காலை 9-45 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கல்லணை, பூண்டி, திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சை சென்றடையும். பின்னர் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மண்டலம் -2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், மணிமேகலை ராஜபாண்டி, வட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், ராஜா மற்றும் கழக நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.