சமூகத்தில் சீரழிக்க கூடிய பரபரப்பான நடவடிக்கைகள் நடந்தால் அதை வேடிக்கை பார்க்காமல் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து கருத்து தெரிவிப்பது வழக்கம். இப்போது ஆன்லைன் சேனல்களில் தனிப்பட்ட ஒருவரை தாக்கியும் பழம்பெரும் பத்திரிகையாளர்கள் ,ஊடக உரிமையாளர்கள் பற்றிய கருத்துக்கள் வைரலாக காணொளி வடிவில் பரவி வருகிறது. காணொளி ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் நடுநிலையாளர்கள் பார்த்து முகம் சுளிக்கும் வண்ணம் அந்த செய்திகள் உலா வருகின்றன. தமிழகத்திலும் மட்டுமல்லாது கேரளாவிலும் இதுபோன்ற காணொளிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த கேரள உயர்நீதிமன்றம் தனது கருத்தை அறிவுரையாக வெளியிட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை ‘காழ்ப்புணர்ச்சியில் செயல்படும் ஆன்லைன் சேனல்கள்’ இதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். செய்திகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டிய கடமை ஆன்லைன் செய்தி ஊடகங்களுக்கு உள்ளது. ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் சேனல்கள் சில செய்தி வெளியிட்டு வருவது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ விரும்புவதை தனிப்பட்ட முறையில் செய்ய உரிமையுண்டு. முறையான காரணங்கள் இன்றி நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை. இவ்வாறு கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
