த்ரிஷா, குஷ்பூ மீது மானநஷ்ட ஈடு தொடர அனுமதி கோரிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக நடிகா் மன்சூா் அலிகானுக்கு நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகா் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனா். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிா் ஆணையத்தின் பரிந்துரைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், நடிகா் மன்சூா் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மன்சூா் அலிகான் மன்னிப்புக் கோரினாா். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.
இந்நிலையில் முழு காணொலியையும் பாா்க்காமல், தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கேட்டு, நடிகா் மன்சூா் அலிகான் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமாா், இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷா தானே வழக்கு தொடா்ந்திருக்க வேண்டும்? கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகவா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினாா்? எனவும் கேள்வியெழுப்பினாா். இதையடுத்து, மன்சூா் அலிகானின் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகா் சிரஞ்சீவி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தாா். இந்தநிலையில், மன்சூர் அலிகானின் மனு இன்று ( 22.12.2023 ) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பெண்களுக்கு எதிரான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.