வருமான வரி செலுத்தும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், திருச்சி பெமினா ஹோட்டல் காவேரி அரங்கில் இன்று நடைபெற்றது. திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர் ஜெ. புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பேரமைப்பு சார்ந்த பல்வேறு சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் வரி செலுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பேசினார்.



இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், நமது நாட்டின் வளர்ச்சியில் வருமான வரி முக்கிய பங்கு வகிக்கிறது எனவே வரியினை உரிய தவணையில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் வரி செலுத்துவதின் முக்கியத்துவம், வரி கட்ட தவறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்து வரியை திரும்ப பெற(Refund claim) விழைவோர்கள் எதிர்கொள்ள வேண்டிய அபராதம் மற்றும் தண்டனை குறித்தும் பேசினார். அவ்வாறு தவறு செய்தால், வருமான வரி சட்டம் பிரிவு 270A ன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தைப் பொறுத்து சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் கூறினார். எனவே, இதுபோன்ற அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க, வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது உரிய கவனம் செலுத்துமாறும் தெரிவித்தார். வருமான வரி அதிகாரி வள்ளியம்மை ஒளித்திரை மூலம் வரி செலுத்துவோர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வணிகர்கள் சார்பில் பேசினார். இறுதியில் வருமான வரி அதிகாரி ஜான் ரஸ்ஸல் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.