Rock Fort Times
Online News

பத்திரப்பதிவுத்துறை என்ன செய்யபோகிறது?

விழிபிதுங்கும் ஊழியா்கள் மற்றும் அதிகாாிகள்

முன்பெல்லாம் மாதத்தில் உள்ள முக்கிய முகூர்த்த நாட்களில்தான், பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் எல்லா நாட்களிலுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது. அதனால்தான் இந்த கூட்டம் என நினைக்கத்தோன்றும். ஆனால், உள்ளே நுழைந்து பார்த்தால் நிலைமையோ வேறு விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 9 பத்திரப்பதிவு மண்டலங்கள், 50 மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள், 571 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் அலுவலர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், மக்களின் அலைச்சலையும் பத்திரப்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதமாகவும், கடந்த
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் “ஸ்டார் 2.0” என்கிற திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, பத்திரப்பதிவு தொடங்கி பட்டாமாறுதல் வரை அனைத்தும் ஆன்லைன் வழியில் மேற்கொள்ளப்படும் என அறிவித்து, சுமார் 176 கோடி ரூபாய் செலவில், இதற்கென பிரத்யேக சாஃப்ட்வேரும் உருவாக்கப்பட்டது.

இனி நமக்கு ஒர்க் டென்ஷன் இல்லை, நிம்மதியாக வேலை பார்க்கலாம் என நினைத்திருந்த அதிகாரிகளுக்கு, சர்வர் பிரச்சனை ரூபத்தில் உருவான புது தலைவலி, அது தற்போது பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில்கூட, வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இடத்தை பதிவுசெய்யவந்து மணிக்கணக்கில் காத்திருந்த நபர், ஒருகட்டத்தில் மயங்கியே விழுந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சார்பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படியான சம்பவங்கள், தமிழ்நாட்டின் பலபகுதிகளில் தொடர்ச்சியாக அரங்கேறிவருகின்றன. தமிழக அரசிற்கு வருவாய் ஏற்படுத்தித் தரக்கூடிய முக்கியத்துறைகளில் ஒன்றான, பத்திரப்பதிவுத்துறையில் என்னதான் நடக்கிறது என்ற விபரங்கள் அறிய, விசாரணையில் இறங்கினோம். அப்போது நம்மிடம் பேசிய சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள்., பத்திரப்பதிவுத்துறையை மேம்படுத்தவும், மோசடிகளை தடுக்கவும், வேலைகளை விரைந்துமுடிக்கவும், “ஸ்டார் 2.0” என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதற்கென டிசிஎஸ் நிறுவனத்தால் பிரத்தியேக சாஃப்ட்வேரும் வடிவமைக்கப்பட்டது. ஆனால், போதுமான சர்வர் கெபாசிட்டி இல்லாததால், ஐந்துநிமிடத்தில் முடியவேண்டிய வேலைக்கு இரண்டுமணி நேரம் வரை காத்திருக்கவேண்டியுள்ளது.
எப்போது சர்வர் பிரச்சனை சரியாகும், அடுத்தகட்ட வேலையை பார்க்கலாம் என, கம்ப்யூட்டரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளது.

இந்த சர்வர் பிரச்சனையைப்பற்றி மக்களிடம் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏதோ நாங்கள் தான் வேண்டுமென்றே நேரத்தை இழுக்கிறோம் என நினைத்துக்கொண்டு, எங்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிடுகின்றர்.
இதுபற்றிய புகார்களை பதிவுத்துறையின் மேலதிகாரிகள் கவனித்திற்கு கொண்டுசெல்லலாம் என நினைத்து, இது பற்றி பேசினால் அவர்கள் இதை கண்டுகொள்வதே இல்லை. அது அப்படித்தான் இருக்கும், நீங்க வேலையை சீக்கிரம் முடியுங்கள் என்கிறார்கள். பிரச்சனை சர்வரில் இருக்கிறபோது, எங்களால் எப்படி சரிசெய்யமுடியும்? என்கிற கேள்விக்கு இப்போதுவரை பதில் இல்லை. ஆனால், மாதந்தோறும் சாஃப்ட்வேர் மெயிண்டனென்ஸ்க்கு என ஒரு பெரிய தொகை வழங்கப்பட்டுக்கொண்டேஇருக்கிறது. அதைமட்டும் மாதாமாதம் கணக்கிட்டு வாங்கிக்கொள்ளும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனம், சர்வர் பிரச்சனையின் சீரியஸை புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அமைச்சர், பதிவுத்துறை தலைவர் உள்ளிட்டவர்கள் விசிட் செய்யும், மண்டல, மாவட்ட அளவிலான ஆய்வுகளின் போது மட்டும்,அவர்களிடம் நல்லபெயர் எடுக்கவேண்டும் என்ற காரணத்தால், ஆய்வு நடைபெறும் சம்ந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் தவிர, மாவட்டத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் பத்திரப்பதிவு பணிகள் முடக்கப்படுகிறது.

எனவே அப்போதுமட்டும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இதனால் ஆய்வு செய்யவருபவர்களின் கவனத்திற்கு, இந்த சர்வர் பிரச்சனை சென்று சேர்வதில்லை . காலையில் 10 மணிக்கு ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு முடியவேண்டிய வேலை, சர்வர் பிரச்சனையால், இரவு 8 மணிவரை நீடிக்கிறது. தினமும் இதுவே தொடர்கதையாகிப்போவதால், தேவையில்லாத மன உலைச்சலாலும், பணிச்சுமையாலும் பாடாய்படுகிறோம். இதிலிருந்து விடுபட பத்திரப்பதிவுத்துறையின் சர்வர் கெபாசிட்டியை அதிகரிப்பது ஒன்றே தீர்வாக அமையும். அதோடு இத்துறையைப்பற்றிய புரிதல் உள்ள அதிகாரிகளை தேர்ந்தெடுத்து தலைமைப் பதவியில் அமர்த்தினால் மட்டுமே பிரச்சனைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு பத்திரப்பதிவுத்துறை பளிச்சிடும் என்றார்கள். இடத்தை பதிவுசெய்யவந்து சார்பதிவாளர் அலுவலகங்களில் கால்கடுக்க காத்திருக்கும் பொதுமக்கள், இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்கிற நடிகர் சந்தானத்தின் காமெடி டயலாக்கை கமெண்ட் அடித்துவருகின்றனர் .

இனிமேலாவது தமிழக அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி சாஃப்ட்வேரின் சர்வர் கெபாசிட்டியை அதிகரித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கஷ்டத்தை தீர்க்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்