Rock Fort Times
Online News

இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு கி.வீரமணி தேர்வு…!

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு, இந்த ஆண்டுக்கான தகைசால் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூக பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு 40 முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களை பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணிக்கு 2023-ம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்