நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறார். ஆனால், பாரதிய ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி கட்சிகளை சார்ந்தே ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க இன்னும் 40 தொகுதிகள் தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாததால் அங்குள்ள 67 தொகுதிகளை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நேரடியாக ’கை’ சின்னத்தில் போட்டியிட்ட ஆந்திரம் (23), அருணாச்சலப் பிரதேசம் (2), ஹிமாச்சலப் பிரதேசம் (4), மத்தியப் பிரதேசம் (29), உத்தரகண்ட் (5) , திரிபுரா (2), சிக்கிம் (1), மிஸோரம் (1) ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 67 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆந்திரத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 16-ல் தெலுங்கு தேசமும், பாஜக 4-லிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளிலும், உத்தரகண்ட்டில் 5 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பதிவு செய்தது. இந்த 8 மாநிலங்களில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கும்.
Comments are closed.