Rock Fort Times
Online News

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 8 வழிச் சாலை…. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்..!

மிலாடி நபி விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று(27-08-2026) மீண்டும் தொடங்கியது. பொதுப் பணித்துறை குறித்து பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார். பேரவை உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதல் அர்ஜுனா, ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே கிராசிங் உள்ள சில இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் இல்லை. எனவே, முதலில் செய்ய வேண்டிய பணிகளாக ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பல ரயில்வே கிராசிங் பகுதிகளில் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளதாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பணியாக ரயில்வே மேம்பாலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதுபோல ரிங் ரோடு பிரச்சனையும் உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றார். எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்நிலை மேம்பாலம் அமைக்குப் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கவிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்த்தால் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட உயர்நிலைப் பாலப் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பாதையை 8
வழிச் சாலையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்க 8 வழிச் சாலையே தீர்வாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், முன்னாள் முதல்வர் கூறிய கருத்து அரசின் கவனத்தில் உள்ளதாகவும், செங்கல்பட்டில் இருந்து சென்னை வரும் பாதையில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்