திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி கவிபாரதி நகரைச் சேர்ந்தவர் ஆர்.ஸ்டாலின் (33). தொழிலாளியான இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி 17- ம் தேதி திருச்சி நீதிமன்றம் எதிரேயுள்ள வ.உ.சி.சிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாரதிதாசன் (28) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி, ஸ்டாலின் பையிலிருந்த பணத்தை பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பாரதிதாசனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கத்தியை காட்டி மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்த குற்றத்துக்காக பாரதிதாசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஹேமந்த் ஆஜரானார்.
Comments are closed.