திருச்சி மாநகர பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 6,251 பேர் கைது…!
போலீஸ் கமிஷனர் எம். சத்தியபிரியா ஐபிஎஸ் தகவல்..
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக எம்.சத்தியபிரியா ஐபிஎஸ் பொறுப்பேற்றதிலிருந்து மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் காரணமாக கடந்த 6 மாதங்களில் மட்டும் 6,251 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 6 மாதங்களில் 15 சரித்திர பதிவேடு ரவுடிகள் உட்பட 61 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த 94 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும், அதில் 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 29 நபர்களுக்கு சரித்திரபதிவேடுகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 195 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைதியை பேணி காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 445 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 5 ரவுடிகள் உட்பட 6 நபர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை செய்த 108 நபர்கள் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 110 நபர்கள் மீதும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1061 நபர்கள் மீதும் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 3,721 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக நடப்பாண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என கமிஷனர் சத்திய பிரியா தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.