Rock Fort Times
Online News

திருச்சியில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது…!

திருச்சி இ.பி.ரோடு கருவாட்டுப்பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணிக்குமார் (வயது 24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும். அப்பகுதியை சேர்ந்த ஜோதி (40) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜோதிக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி, 2 கணவர்களும் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதேஷ்(19) என்ற மகன் உள்ளார். பரணிக்குமாரும், ஜோதியும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து பரணிக்குமாருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் பெண் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக பரணிகுமாருக்கும், ஜோதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவிலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரணிக்குமார், ஜோதியை தாக்கியுள்ளார். இதைக்கண்ட மாதேஷ் மற்றும் அவரது நண்பனான 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பரணிக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சிங்காரத்தோப்பு நுழைவு வாயில் அருகே வந்த பரணிக்குமாரை பின்தொடர்ந்து வந்த மாதேசும், அந்த சிறுவனும் கத்தியால் அவரது கழுத்தில் குத்தி, கல்லால் தலையில் தாக்கினர். மேலும் ஜோதியின் தந்தையான மனோகரனும்(60), பரணிக்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பரணிக்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிக்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மாதேஷ், மனோகரன் மற்றும் சிறுவன், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜோதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், மாதேஷ் மற்றும் மனோகரனை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திலும், ஜோதியை மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்