திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர் மத்திய படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40). இவர், அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் நாமக்கல்லில் தங்கி படித்து வருகிறார்.இந்தநிலையில் கடந்த மாதம் 23ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலச்சந்தர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 52 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி துவாக்குடி மலை பாரதியார் தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் கெளதம் என்கிற தேஜா (24), அவருடைய மனைவி அபிநயா (22) மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு சந்திராபுரம் வலையார்பாப்பு பாறையைச் சேர்ந்த பாபு என்கிற சம்சுதீன் என்கிற ஏசுதாஸ் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து திருட்டு போன 52 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கேரளாவை சேர்ந்த ஏசுதாஸ் 3 மதத்தின் பெயர்களை வைத்துக்கொண்டு பல இடங்களில் தனியாகவும், நண்பர்களுடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது 30 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.