Rock Fort Times
Online News

கரூர் அருகே சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த வங்காளதேசத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது…!

கரூர் அருகே சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த வங்காள தேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில், தொழில் நகரங்களான திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்தவகையில் வங்காள தேசத்தைச் சேர்ந்த முகம்மது அலாம் சர்தார் (49), அவரது இரண்டாவது மனைவி மோல்புல்னேசா (31) மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் வங்காள தேசத்திலிருந்து புறப்பட்டு போலி ஆவணங்கள் மூலம் கொல்கத்தாவிற்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தனர். பின்னர் அங்கிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்தனர். மேலும், ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.  பாஸ்போர்ட் சரி பார்ப்பதற்காக இன்று(28-12-2024) க. பரமத்தி காவல் நிலையத்தில் வைத்து முகம்மது அலாம் சர்தாரிடம், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் விசாரணை நடத்தினார். மேலும் ஆவணங்களை சரி பார்த்தபோது முரண்பாடாக இருந்தது. மேலும், அவர்கள் வேலை பார்த்த தொழிற்சாலைக்கு சென்று மூவரின் அடையாள அட்டையை சரி பார்த்தபோது அதுவும் முரண்பாடாக இருந்தது. இதன் காரணமாக சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா? என்பது குறித்து க.பரமத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்