திருச்சியில் தோழியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவரிடம் பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது- மற்றொருவருக்கு வலை…!
திருச்சி, செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 24). இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தோழியுடன் பெல் ‘சி’ மைதானம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் குரு பிரசாத்திடம் இருந்த ரூ.19,500 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து பாலக்கரை போலீசில் குரு பிரசாத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 24), பிரகதீஸ்வரன்(20) என்பதும், பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து குரு பிரசாத்திடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய்குமார், பிரகதீஸ்வரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். பிரகாசை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed.