Rock Fort Times
Online News

பிரபல கல்லூரிகளின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்த தீட்சிதர் உட்பட 2 பேர் கைது… !

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமப் பகுதியில் கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் கேட்பாரற்று கிடந்துள்ளது.
இதனைப் பார்த்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் சிதம்பரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், அங்கு சென்ற போலீஸார் அங்கு கிடந்த 80-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஒரு ரசீது ஆகியவற்றை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து விசாரணை நடத்தினர்.
ரசீது யார் பெயரில் உள்ளது என பார்த்தபோது சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த தீட்சிதர் சங்கர் பெயரில் இருந்தது. அதன்பேரில், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவருடன் சிதம்பரத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீஸார் அவரையும் பிடித்து வந்தனர். அவர்கள் இருவரிடமும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான போலீஸார் தனி இடத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தியாவில் உள்ள கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், பிரபல கல்லூரிகளின் சான்றிதழ்களை போலியாக தயாரித்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், லேப்டாப், போலி சான்றிதழ்களை பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான பிரின்டர் அவர்கள் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்