திருச்சி, ஐ.ஐ.எம்-ல் 13-வது பட்டமளிப்பு விழா!- நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் ( IIM )நாளை ( மார்ச் -29 ) 13வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகேயுள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். இது தொடர்பாக ஐ.ஐ.எம் இயக்குனர் பவன் குமார் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது., நாளை நடைபெறும் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இது தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார். அப்போது பட்டமளிப்பு விழா தொடர்பான அச்சிடப்பட்ட அழைப்பிதழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது ஏன் ?என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பவன் குமார் சிங், வழக்கமாக அழைப்பிதழ்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் இருக்கும். தமிழில் இருக்காது. தமிழில் அழைப்பிதழ் வழங்கினால், பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பதில் தெரிவிக்க வேண்டி உள்ளது. இந்த நடைமுறை காரணமாகவே ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
Comments are closed.