Rock Fort Times
Online News

ரூ.2000 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் தலைமறைவு…!

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையைச் சேர்ந்த ஜாபர்சாதிக் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை கைது செய்த டெல்லி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதை பொருட்கள் மூலம் சுமார் 2000 கோடி சம்பாதித்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை அவர் அரசியல் புள்ளிகள் சிலருக்கு கொடுத்ததும், ரியல் எஸ்டேட் நிறுவனம், திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் முதலீடு செய்ததும் தெரிய வந்தது. இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டவுடன் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில், டெல்லியில் விசாரணை முடிந்து விமானம் மூலம் ஜாபர் சாதிக் இன்று(18-03-2024) சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னையை அடுத்த அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இருவரும் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க அவர்களுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக் அவுட்” நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்