நாகப்பட்டினம், மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்தவர் எம்.அலெக்ஸ்(32). இவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை கடந்த ஒரு வாரமாக போலீஸார் கண்காணித்து வந்தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு படகு மூலமாக போதைப்பொருட்களைக் கடத்தி செல்லவிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதுக்கோட்டை மேலவிலக்குடியில் இருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன் கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், அவரிடமிருந்த 950 கிராம் எடையுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், புதுக்கோட்டை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலெக்ஸை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தற்போது கைதாகியுள்ள அலெக்ஸ் மீது பல்வேறு மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
Comments are closed.