“நேரில் உங்களை இனி சந்திக்க முடியாது என்பதா?” அப்ப…ஓட்டு போட்ட மக்களுக்கு பட்டை நாமமா?- துரை வைகோ எம்.பி.க்கு அமமுக செந்தில் நாதன் கேள்வி…!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வைகோவின் மகன் துரை வைகோ இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவருக்கு மதிமுகவின் சின்னமான பம்பரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் நாள் நெருங்குவதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக நிர்வாகிகள் கூறியபோது அதெல்லாம் முடியாது போட்டியிட்டால் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று திமுக முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் மேடையிலேயே அழுது புலம்பினார். அதன்பிறகும் மூத்த நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் என யாரையும் மதிக்காமல் தான்தோன்றி தனமாக செயல்பட்டார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கட்சி கட்டளையை ஏற்று பம்பரமாக சுழன்று அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். சரி இதோடு விட்டதா பிரச்சனை என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வெற்றி பெற்ற பிறகும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை. வாக்களித்த மை கூட இன்னும் சிலருக்கு முழுவதுமாக மறையவில்லை. ஆனால், மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பிறகு, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் துரை வைகோ எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது அவர் “நேரில் வந்து சந்திப்பதற்கு இனி வாய்ப்பு இருக்குமோ என தெரியவில்லை” என பேசினார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டவரும், திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளருமான செந்தில்நாதன் கூறுகையில், நேரில் உங்களை சந்திக்க முடியாது என்று துரை வைகோ எம்பி உரைப்பது மக்கள் பணி ஆற்ற வருவோர்க்கு அழகல்ல. அப்ப ஓட்டு போட்ட மக்களுக்கு இனி பட்டை நாமம் தானா? அவருக்காக உழைத்த சான்றோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சந்தர்ப்பவாதிகள் விலகினாலும், திருச்சி நாடாளுமன்ற மண்ணின் மைந்தர்கள், ஓயப் போவதில்லை. மக்கள் செல்வரின் ஆணைப்படி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளையும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும், திருச்சி வாழ் மக்கள் எப்பொழுதும், எந்நேரமும் நேரடியாக என்னை சந்திக்கலாம். “வாரிசு கோட்டாவில்” அரசியல் பதவிகளுக்கு வராத இம்மண்ணின் மைந்தர்கள் என்ற தார்மீக முறையில், முழு நேர களப்பணி ஆற்றும் நாங்கள், எங்களால் முடிந்த பணிகளை, அறப்போராட்டங்களை எந்தவித சிரமமும் இன்றி முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.