இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யூஎஃப்ஐ) புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தை விளையாட்டை விட்டே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சஞ்சய் சிங் தோ்வானதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக நேற்று அறிவித்தார். இந்த வரிசையில் தற்போது, மல்யுத்த வீரர் வீரேந்திர் சிங் யாதவும் இணைந்துள்ளார். சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவாக தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அவரும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வீரேந்தர் சிங் யாதவ், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சகோதரியும் நாட்டின் மகளுமான சாக் ஷி மாலிக்கிற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை நானும் திருப்பி அளிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக் ஷி மாலிக் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். அதேபோல், நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இந்த விஷயத்தில் தங்கள் முடிவை அறிவிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் மற்றும் அவரது நண்பர் பிரிஜ் பூஷண் சரண்சிங்கிற்கு எதிராக வீரர்கள் அடுத்தடுத்து பத்மஸ்ரீ விருதை திரும்ப அளித்து வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.