வெளிநாட்டில் வேலை – மோசடி வலை விரிக்கும் போலி நிறுவனங்கள் ! திருச்சி கலெக்டர் வெளியிட்ட ” உஷார் ” அறிவிப்பு !
தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை மூளை சலவை செய்து சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சைபர் டிமைகளாக மாற்றப்படுவதாகவும் தமிழக அரசுக்கு அண்மை காலமாக நிறைய புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், அரசின் மூலம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என திருச்சி கலெக்டர் என் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., வெளிநாட்டில் வேலை, கை நிறைய பணம் போன்ற பல்வேறு கவர்ச்சிகர விளம்பரங்களை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பி இளைஞர்களை மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து, மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர்கிறார்கள். இவ்வாறு செல்லும் நபர்களை சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் சென்று, கால் சென்டர் மோசடி, மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற சட்டவிரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலை செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசியல் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். ஒருவேளை உங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை அல்லது மாநில குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விபரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்கள் தெரிய விரும்பினால் சென்னையில் உள்ள குடிபெயர்வு பாதுகாப்பு அலுவலகத்தில் உதவி எண்களான 90421 49222 என்ற செல்போனின் மூலமாகவும் தொடர்பு கொண்டு தேவையான விளக்கங்கள் பெறலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணான 18003093793, 8069009901,8069009900 என்ற எண்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
Comments are closed.