Rock Fort Times
Online News

‘ஜெயலலிதா மகள்’ என்று கூறி அதிமுக நேர்காணலுக்கு வந்த பெண் விரட்டியடிப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். நேற்று காலை, சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இன்று(ஜன. 10) காலை முதல் கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டம் மற்றும் மாலை திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிகொண்டு ஜெயலலிதா கெட்டப்பிலேயே வலம் வரும் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். தான், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை அங்கிருந்து அதிமுகவினர் விரட்டி அடித்தனர். ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொள்ளும் இவர், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியதாகவும், எல்லோரையும் மீண்டும் அழைத்துப் பேசிவிட்டு என்னிடம் சொல்வதாகச் சொல்லி இருக்கிறார் என அப்போது கூறி இருந்தார்.அப்போது அவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்