திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரப்பு வியாபாரிகள் சார்பில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டமன்ற கேள்வி தொடரில் காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அதை சீரமைத்து தர தாங்கள் கோரிக்கை வைத்தீர்கள். இரவோடு இரவாக அந்த பணி முழுமையாக நடைபெற்றது. தங்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும்,
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் காந்தி மார்க்கெட் நிரந்தரமாக இங்கே இயங்குமா? அது நவீனமயமாக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு துறை சார்ந்த அமைச்சர் பதில் அளிக்கையில், காந்தி மார்க்கெட் விரைவில் நவீனமயமாக்கப்படும் என்பதை தங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். தங்களின் தொகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் நிரந்தரமாக இங்கேயே இயங்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு வியாபாரிகளின் கோரிக்கை. அது நவீன மயமாக்கப்பட வேண்டும். நவீனமாக்கப்பட்ட பிறகு எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் பழைய வியாபாரிகளுக்கு மட்டுமே கடை ஒதுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏல முறையை கையாளக் கூடாது என்பது ஒட்டுமொத்த வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பஞ்சப்பூரில் காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வணிக கடைகள் மார்க்கெட் கட்டப்பட்டு வருவதாக திருச்சி மேயர் அன்பழகன் தெரிவித்த வண்ணம் உள்ளார். பஞ்சப்பூரில் கட்டப்படும் புதிய மார்க்கெட் காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றாக கட்டுகிறார்களா?அல்லது தனிநபர்களுக்கு கட்டுகிறார்களா? என்ற குழப்பத்திலும் அச்சத்திலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் உள்ளார்கள். காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருள் கிடைக்கும் இடமாக திகழ்கிறது காந்தி மார்க்கெட். காந்தி மார்க்கெட் உள்ளே சுமார் 32 வகையான வியாபாரங்கள் நடைபெறுகிறது. அதனைச் சார்ந்த நிலையான கடைகள், செட் அமைத்த தரைக் கடைகள் என 2000-க்கும் மேற்பட்ட வியாபாரக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
காந்தி மார்க்கெட்டை நம்பி வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், கூலி ஆட்கள், சந்தை வியாபாரிகள்,
மாநகர், புறநகர் மளிகை கடை வியாபாரிகள், தலை சுமை பெண்மணி வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், உழவர் சந்தை வியாபாரிகள், சின்ன சின்ன மார்க்கெட் வியாபாரிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள், என சங்கிலி தொடராக பல லட்சம் மக்கள் குடும்பமாக இந்த காந்தி மார்க்கெட்டை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஆட்சி மாறினால் காட்சிகள்மாறும் என நம்பி இருந்தோம். ஆனால், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடு, அறிவிப்பால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் குழப்பத்திலும், அச்சத்திலும் உள்ளார்கள். தற்போது நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களின் கோரிக்கையான காந்தி மார்க்கெட் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் கேள்வியாக முன்வைத்து எங்களையும் எங்களைச் சார்ந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
1
of 917
Comments are closed, but trackbacks and pingbacks are open.