பிறந்தநாளின் போது வீச்சரிவாள் மற்றும் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர், ரவுடி கைது, அபாயகரமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது போன்ற செய்திகளை நாம் அன்றாடம் படித்திருக்கிறோம், கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், சமூக பொறுப்புடன் செய்தி மற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்ப வேண்டிய தமிழக ஊடகங்கள் இன்று தங்களது டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்து வெளியிடலாம் என்றாகி விட்டது. இதற்கு சமீபத்திய மிகப்பெரிய உதாரணம் விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஜோடி ஆர்யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நடன நிகழ்ச்சியில் கடந்த 02.03.2025ந் தேதி ஞாயிறன்று இரவு வெளியான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிகளில் ஒரு ஜோடியை எலிமினேட் செய்ய வேண்டும். இந்த பொறுப்பு மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் வசமே ஒப்படைக்கப் படுகிறது. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எலிமினேட் லிஸ்டிலுள்ள இரு ஜோடிகளில் ஒரு ஜோடியை வெளியேற்ற ENCOUNDER என்ற தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. இந்த ENCOUNDER முறை என்னவென்றால் இரு ஜோடிகளில் ஒரு ஜோடியை சக போட்டியாளர்கள் வாளால் குத்தி என்கவுன்டர் செய்ய வேண்டுமாம்….?
என்ன ஒரு கேவலமான, அபாயகரமான சிந்தனை இது. இந்த நிகழ்ச்சியை அநேக குழந்தைகள் பார்க்கிறார்கள் என்பதை நிகழ்ச்சி இயக்குநர் நினைவில் கொள்ள வில்லையா…? இது ஒரு நடன நிகழ்ச்சி என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் பார்க்கின்றார்கள். கர்ப்பிணி தாய்மார்கள், வயதானோர் பார்க்கிறார்கள். இப்படியான தருணத்தில் இந்த நிகழ்ச்சியில் பற்கேற்பாளரை வெளியேற்ற நிகழ்ச்சி நிறுவனம் கையாளும் இத்தகைய மலிவான விளம்பர யுக்தியால் குழந்தைகள் மனம் வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இதுபோன்ற சமூக பொறுப்பில்லாமல் குழந்தைகள் மனம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் வண்ணம் தொகுக்கப்படும் இது போன்ற நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதோடு, சம்மந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.