Rock Fort Times
Online News

தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதா?- காதலியை தீர்த்துக்கட்ட கூலிப்படையுடன் காத்திருந்த வாலிபர் கைது…!

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவரும் சமூக வலைதளமான முகநூல் மூலம் பழகி வந்துள்ளனர். பின்னர், இருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில், சிவசங்கரின் பழக்கவழக்கம் பிடிக்காததால் அந்த இளம்பெண் அவரிடம் இருந்து விலகிச் சென்றுள்ளார்.
இதனிடையே, கரூர் மேலப்பாளையத்தை சேர்ந்த அஜித்(22) என்ற வாலிபரை காதலித்து வந்த அந்த பெண், சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார்.இதை அறிந்த சிவசங்கர், தன்னை காதலித்து விட்டு வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் இருவரையும் தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். அவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியொன்றில் நேற்று (20-01-2025) திங்கட்கிழமை இரவு அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன், கூலிப்படையைச் சேர்ந்த மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (38), திண்டுக்கல் மாவட்டம், நாராயணன் பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) ஆகிய இருவரும் உடனிருந்துள்ளனர். இதுகுறித்த தகவல் பசுபதிபாளையம் தனிப்பிரிவு காவலர் ராமலிங்கம் என்பவருக்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அங்கு தங்கியிருந்த சிவசங்கர் மற்றும் ஆனந்த், ஹரிஹரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து, அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
காதலியை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டிய வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்