இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்திருந்தார். எனினும், அவருடைய ராஜினாமா எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ராஜினாமா அறிவிப்புக்கு பின்னர் அவர் பெரிய அளவில் வெளியே வரவில்லை. எந்தவித விமர்சனங்களையும் வெளியிடவில்லை. அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால், அவர் எங்கே இருக்கிறார்? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் இன்று (ஆகஸ்ட் 25) கூறும்போது, இதுபற்றி தேவையற்ற குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். ஜெகதீப் தன்கர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தவர். அவர், தன்னுடைய பதவி காலத்தின்போது அரசியல் சாசனத்தின்படி, சிறந்த முறையில் பணியாற்றியவர். அவருடைய உடல்நல பாதிப்புகளை முன்னிட்டு பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த விசயத்தில் வேறு ஏதேனும் உண்டா? என நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சிக்க வேண்டாம். உடல்நலம் சார்ந்த விசயங்களுக்காக தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என்றும் அதனால், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இந்த ராஜினாமா பற்றி அவருடைய கடிதம் தெளிவான சுய விளக்கம் அளித்திருக்கிறது. உடல்நலனை கவனத்தில்கொண்டு அவர் பதவி விலகியுள்ளார். அவர் மந்திரிகள், பிரதமர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவருடைய மனதில் இருந்து நன்றி தெரிவித்து இருக்கிறார் என்று அமித்ஷா விளக்கம் அளித்திருக்கிறார்.
Comments are closed.