Rock Fort Times
Online News

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாம்பழம் சின்னம் யாருக்கு..?- தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு! 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது  மகன் அன்புமணிக்கும் இடையே  மனக்கசப்பு நீடித்து வருவதால் கட்சி  மற்றும் மாம்பழம் சின்னம் தனக்குத்தான் என இருவரும் மாறி மாறி சொல்லி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது.  தேர்தல் ஆணையத்திலும் இருவரும் முறையிட்டுள்ளனர். இந்தநிலையில் அன்புமணி, அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அங்கு செயல்பட்டு வருகிறார். ராமதாஸ் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். நிலைமை இவ்வாறு இருக்க, கட்சியின் மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு  தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும்,  பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் எந்தவிதமான கடிதத்தையும் அனுப்பியிருக்கக் கூடாது. கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து தகவல்களும் தன்னிடமே அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், 2025ம் ஆண்டு மே மாதம் வரை அன்புமணி பதவிக்காலம் முடிந்துவிட்டது. இருப்பினும் அன்புமணி தலைவராக நீடித்து வருகிறார். தேர்தல் ஆணையத்தில், போலி ஆவணங்களை சமர்பித்துள்ளார்.  மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், பாமக மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் தற்காலிகமாக முடக்குவதாக உறுதி அளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த சின்னம் முடக்கப்படாமல் இருப்பது நீதிமன்ற உத்தரவாதத்திற்கு முரணானது என்றும் மனுவில்  சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.  இந்த மனுமீதான விசாரணை கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்தநிலையில் இன்று (09-02-2026)தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது : பாமகவின் தலைவர் அன்புமணி தான் என டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்து உள்ளது. 2026 வரை அன்புமணியின் பதவி காலம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறு ஆய்வு விசாரணையில் தெளிவுபடுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்க்கட்சி பிரச்சினை எழுவதற்கு முன் தரப்படும் ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் வாதத்தை முன் வைத்தது. அதனை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என தெரிவித்தது. இதன்மூலம் கட்சி மற்றும் சின்னம் அன்புமணிக்கு சொந்தம் என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில்  ராமதாசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்