தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் களம் பரபரப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கிறது. வலுவான கூட்டணியை வைத்துள்ள திமுகவில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிக இணைந்து அரசியல் களத்தை மேலும் அதிரடித்தது. அந்தக் கட்சி தாங்கள் போட்டியிடும் தொகுதி பட்டியலையும் திமுகவிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் 20 தொகுதிகள் அடங்கிய பரிந்துரைப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருந்து 7 தொகுதிகள் தேமுதிகவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக கொடுத்துள்ள தொகுதி பட்டியலில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கேவி குப்பம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உழுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய தொகுதிகளின் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 7 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது. அதில் பிரேமலதா விஜயகாந்த் ரிஷிவந்தியம் அல்லது விருத்தாச்சலம் ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜயபிரபாகரன் சிவகாசி அல்லது விருதுநகரில் போட்டியிடலாம். விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதி போட்டியிட வாய்ப்பு உள்ளது. முன்னாள் எம் எல் ஏ வெங்கடேசன் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. பல்லாவரத்தில் அனகை. முருகேசனுக்கும், பாப்பிரெட்டிப்பட்டியில் இளங்கோ வனுக்கும், சேலம் தெற்கில் அழகாபுரம் மோகன்ராஜுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர மாநில நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், தவெகவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே கோபி தொகுதியில் தனது பரப்புரையை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். இதனால் அவர் இந்த தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
சீமான்
காரைக்குடி தொகுதியில் இந்த முறை சீமான் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் 16.81 சதவீத வாக்குகளை பெற்று அங்கு மட்டுமே நாதக டெபாசிட் பெற்றது. காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் நாதக 14.80 சதவீத வாக்குகளை பெற்றது. அங்கு சீமான் களம் இறங்கினால் தொகுதிக்குள் தனது குடும்பத்தினரை வீடு வீடாகப் பிரசாரம் செய்ய வைத்துவிட்டு, மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வது தனக்கு வசதியாக இருக்கும் என்று சீமான் கருதுவதாகத் தெரிகிறது.

Comments are closed.