திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் பழைய விமான நிலைய வளாகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம் பி., தமிழக அளவில் திருச்சி விமான நிலையம் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்க பணிகளை வேகமாக முடித்து வருகிறோம். இன்னும் 10 ஏக்கர் பட்டா இடம் கையகப்படுத்த வேண்டியதுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும். அது முடிவடைந்த உடன் மீதமுள்ள பணிகளை மாநில மற்றும் மத்திய அரசுடன் ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருச்சியில் மிக முக்கிய பகுதியான திருச்சி ரயில்வே மேம்பாலம் மற்றும் மாரிஸ் மேம்பால பணிகள் எப்போது முடியும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு மாரிஸ் மற்றும் ஜங்ஷன் மேம்பால பணிகள் குறித்து வாரத்திற்கு ஒருமுறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறேன். திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தில் தூண்கள் அமைப்பதில் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்ததால் 2 மாதமாக பணிகளை தொடர்வதில் காலதாமதமானது. இதுகுறித்து ரயில்வே . அதிகாரிகளுடன் பேசி இருக்கிறேன். அதிகபட்சம் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரலுக்குள் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.