Rock Fort Times
Online News

நான் செய்தது தவறு, நாக்கு பிளவு ஆபரேஷன் யாரும் செய்து கொள்ளாதீர்கள்- ஜாமீனில் இருந்து வெளியே வந்த வாலிபர் உருக்கம்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் ( 25). இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய நாக்கு நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். அதேபோல அவருடைய நண்பரும் உடன் பணியாற்றுபவருமான ஜெயராமன் என்பவருக்கு நாக்கின் நுனியை வெட்டி டாட்டூ வரைந்துள்ளார். அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எந்தவித அனுமதியும் பெறாமல் இது போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆபரேஷன் செய்ததன் காரணமாக ஹரிஹரனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்பு வீடியோ ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ள அவர், பாடி மாடிஃபிகேஷன் என்ற நாக்கு பிளவு முறையினை அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இது குறித்து முறையாக நான் கற்கவில்லை. புகார் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டேன். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், டிஐஜி வருண்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சிறையில் எனக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. பாடி மாடிஃபிகேஷன் செய்வது தவறு என்றும் எடுத்துரைக்கப்பட்டது. அதனை நான் புரிந்து கொண்டேன். யாரும் பாடி மாடிஃபிகேஷன் செய்ய வேண்டாம். இந்தியாவில் இதுவரை 10 பேர் மட்டுமே பாடி மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். நானும் அவ்வாறு செய்தேன். தற்பொழுது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இனி யாருக்கும் இது போன்ற பாடி மாடிஃபிகேஷனை நான் செய்ய மாட்டேன். நான் கைது செய்யப்பட்ட பின் சில ரவுடிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் எனக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவியது.அது தவறு எனக்கு யாருடனும் எந்த தொடர்பும் இல்லை.நான் டாட்டூ வரையும் கடை நடத்தி வருகிறேன். அதுதவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை என்று அதில் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்