தமிழகத்தின் உரிமையை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4000 கோடியை வழங்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (29-03-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் நடராஜபுரம் ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் கேஎஸ்எம் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 91 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 86 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் 21 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. அந்தத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க ஒன்று பட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில அணி நிர்வாகி கவிஞர் சல்மா மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.