எங்களது கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது மகிழ்ச்சி- திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என எடப்பாடி பழனிசாமி சூளுரை…!
பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று( ஜன. 21) அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தார். அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். இந்தநிலையில் அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்தவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மறைந்த ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை மகிழ்வுடன் வரவேற்கிறேன். மக்கள் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து தமிழக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.