கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள இரண்டாவது பிளாக்கில் சிறை வார்டன்கள் இன்று ( 21.09.2023 ) வழக்கம் போல் சோதனைக்கு சென்றபோது சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூடுதலாக 2 வார்டன்கள் அங்கு வந்தபோது மொத்த கைதிகளும் அங்கே ஒன்றாக கூடி 4 வார்டன்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். உடனே அங்கு வந்த காவலர்கள் மோதலில் ஈடுபட்ட கைதிகளை லத்தி சார்ஜ் செய்தனர். அப்போது சில கைதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேடால் கைகளை கிழித்துக் கொண்டனர். சில கைதிகள் மரத்தின் மீது ஏறி நின்று கொண்டு வார்டன்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி சிறைக்குள் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 வார்டன்கள், 7 கைதிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதிகளின் அறைக்குள் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.