விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் மொத்தம் 86 மாணவர்கள் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியின் தலைமையாசிரியையாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தலைமையாசிரியை ராஜேஸ்வரி பள்ளிக்கு சரிவர வருவதில்லை எனவும், மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்தது. மேலும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி வற்புறுத்தியும், ‘டீ’ டம்ளர், எச்சில் தட்டுகளை கழுவச் சொல்லியும் மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் ஆசிரியர்களின் தொடர் வற்புறுத்துதலால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து வாசல் முன்பாக திடீர் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள், தலைமையாசிரியை ராஜேஸ்வரி, வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் பள்ளிக்கு வருகிறார். அதுவும், இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு விடுகிறார். இதனால் எங்களின் தேவைகளை நிறைவேற்றித்தருவதற்கு தலைமையாசிரியர் இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் பயன்படுத்திய டம்ளர், தட்டுகளை எங்களை கட்டாயப்படுத்தி கழுவச் செய்கின்றனர். அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு முட்டிபோடச்சொல்லி தண்டனை வழங்குகிறார்கள்” என சரமாரியாக புகார்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தாசில்தார் ரெங்கசாமி, “பள்ளி மாணவர்களை நம்முடைய குழந்தைகள் போல நடத்தவேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க ஆவணச்செய்ய வேண்டும் என ஆசிரியர்களிடம் பேசினார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். மாணவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகௌரியிடம் கேட்கையில், “சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவரின் அறிக்கையின்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்” என்றார்.