விநாயகர் சதுர்த்தி விழா: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தீவிரம்…!
தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்னாவளி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த மலைக்கோட்டை கோவில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை (27-08-2025) நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தாயுமான சுவாமி கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட 150 கிலோ ராட்சத கொழுக்கட்டையை தொட்டில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட உள்ளது. இதற்காக 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் நீராவியில் வேக வைத்து தயாரிப்பார்கள். இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் அருட்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.