Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து புங்கனூரில் கிராம மக்கள் தர்ணா- ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்பு…!

திருச்சி மாநகராட்சியுடன் அருகில் உள்ள அதவத்தூர், அல்லித்துறை, வயலூர், அப்பாதுரை, வாளாடி, புங்கனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், அந்தந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று(08-01-2025) புங்கனூர் ஊராட்சியை
மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புங்கனூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட கலெக்டரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற பொது மக்களை கிராமத்திலேயே தடுத்து நிறுத்தினார்கள். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் ஊர் பட்டியதாரர் நந்தகுமார், த.மா.கா.கொள்கை பரப்பு செயலாளர் , ஸ்ரீரங்கம் மதிவாணன், டெல்டா மாவட்ட மகளிர் அணி தலைவர் கிருஷ்ணவேணி மதிவாணன், த.மா.கா. தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம், மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, செல்வம், அதிமுக சார்பில் கவுன்சிலர் கார்த்தி, ஐஜேகே சார்பில் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்