தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான செப்டம்பர் 13-ந் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப். 27ம் தேதி( சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்ய உள்ளார். விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமி புரம், 80 அடி சாலை ஆகிய 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர். காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்று (செப்.25) பிற்பகல் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர். அந்தவகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இடம் ஒதுக்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய், கரூர், நாமக்கல் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜயை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

Comments are closed.