திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் விஜய்…* சாலையின் இருபுறமும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இவரது கட்சி, நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து இன்று (13-09-2025) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதற்காக பிரத்தியேக பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திருச்சி வருகை தந்து அதற்கான ஏற்பாடுகளை கவனித்தார். நடிகர் விஜய் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலை சென்றடையும் வகையில் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். திட்டமிட்டபடி, நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறி மரக்கடை பகுதிக்கு புறப்பட்டார். அப்போது அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து விஜய் கை அசைத்தபடி சென்றார். பிரசார வாகனம் மரக்கடை பகுதியை சென்றடைந்ததும் அங்கு விஜய் வாகனத்தில் நின்றபடி தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினார். விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை பகுதி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Comments are closed.