தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் அன்றைய தினமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்தநிலையில் இன்று(ஏப்ரல் 2) கிழக்குத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் விஜய், மரக்கடை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் கார் மூலம் பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, மணப்பாறை, துறையூர் (தனி), லால்குடி ஆகிய தொகுதிகளின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார். இந்நிலையில் திருச்சி விமான நிலையம் வந்த விஜய்யை புகைப்படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் சென்ற செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்காததால் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Comments are closed.