Rock Fort Times
Online News

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா: சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்…!

ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் தீவிரமாக ஏதோ ஒன்று நடந்திருப்பதாக காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நேற்று, மதியம் 12-30 மணிக்கு ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதில் ஜே.பி. நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு, கூட்டம் மீண்டும் மாலை 4-30 மணிக்கு கூடும் என்று முடிவு செய்யப்பட்டது. மாலை 4-30 மணிக்கு, கூட்டம் ஜெகதீப் தன்கர் தலைமையில் மீண்டும் கூடியது. ஆனால் நட்டா மற்றும் ரிஜிஜு ஆகியோர் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது ஜெகதீப் தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4:30 மணி வரை மிகவும் தீவிரமான ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. முன்னெப்போதும் நடக்காத வகையில், ஜெகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கு அவர் உடல்நிலை காரணங்களைக் கூறியுள்ளார். அவற்றை நாம் மதிக்க வேண்டும். ஆனால் அவரது ராஜினாமாவிற்கு மிகவும் ஆழமான காரணங்கள் உள்ளன என்பதும் ஓர் உண்மை. 2014-க்குப் பிந்தைய இந்தியாவை எப்போதும் பாராட்டிய அதே வேளையில், விவசாயிகளின் நலனுக்காகவும், நீதித்துறை குறித்தும் அவர் அச்சமின்றிப் பேசினார். தற்போதைய ஆட்சியின் கீழ் முடிந்தவரை, அவர் எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாக நடக்க முயன்றார். விதிமுறைகள், நெறிமுறைகளை கடைப்பிடிப்பவராக இருந்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அவரை பற்றி உயர்வாக சொல்கிறது. முதல் முறை அவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கச் செய்தவர்களையும் அது மோசமாகப் பேசுகிறது”. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்