Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல் வழக்கில் ஜூலை 19-ம் தேதி தீர்ப்பு…!

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். வைகோவை வரவேற்க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன் தலைமையில் மதிமுகவினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் விமான நிலைய வாசலில் தங்களது கட்சி கொடிகளுடன் காத்திருந்தனர். வைகோ, சீமான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விமானத்திலிருந்து இறங்கி டெர்மினலுக்குள் வந்தனர். அப்போது வைகோ முதலில் வெளியேறி, வாசல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி மதிமுகவினர் வரவேற்றனர். பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து விட்டு காரில் தஞ்சைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு கூடி இருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களில் சிலர் வைகோ குறித்து கேலி பேசியதாக தெரிகிறது. இதனைக் கேட்டு
ஆத்திரமடைந்த மதிமுக தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரிகாலன் என்பவர் மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சீமானிடம் இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்” எனக்கூறி விட்டு காரில் ஏறி தஞ்சைக்கு புறப்பட்டார். இதற்கிடையே தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய காவல் நிலையத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இரண்டாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் இன்று(ஜூலை 16) நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இம்மாதம் 19 -ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி கோபிநாத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்