Rock Fort Times
Online News

வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம்..! பக்தர்களின் நெரிசலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்…

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் வழக்கம் உள்ளது. அவ்வகையில், இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை ஆக.30 (சனிக்கிழமை) என 2 நாட்கள் வேளாங்கண்ணியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • அரசு பஸ் வழித்தடம்: திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா, பாப்பாகோவில், பறவை, வேளாங்கண்ணி சுனாமி நினைவு வளைவு வழியாக சென்று செயின்ட் மேரிஸ் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பூக்காரத் தெரு, கொள்ளந்திடல் கிழக்கு தெரு, தெற்கு பொய்கை நல்லூர் வழியாக பறவை சென்று, கிழக்கு கடற்கரை சாலை – புத்தூர் ரவுண்டானா வழியாக வெளியே செல்ல வேண்டும்.
  • தனியார் பஸ்கள் மற்றும் இலகு வாகனங்கள்: திருச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் இருந்து வரும் அனைத்து தனியார் பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்களும் புத்தூர் ரவுண்டானா, கிழக்கு கடற்கரை சாலை, ஏறும் சாலை வழியாக ஒரத்தூர் பிரிவு சாலையில் வலது பக்கம் திரும்பிச் செல்ல வேண்டும். அங்கிருந்து வடவூர், நிர்த்தனமங்கலம், கிராமத்து மேடு, கருங்கண்ணி, மேலப்பிடாகை வழியாக இடது பக்கம் திரும்பி திருப்பூண்டி, செருதூர் ஆற்றுபாலம் வழியாக செயின்ட் பீட்டர்ஸ் வாகன நிறுத்துமிடத்தை அடைய வேண்டும். பக்தர்கள் அங்கிருந்து பேராலயத்திற்கு சென்று, பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும் என்றும் இதேபோல் ஆட்டோக்கள், அவசர ஊர்திகள் மற்றும் சரக்கு வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட வழிகளில் செல்ல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்