நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பஸ், ரயில், விமானம் மூலம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அன்னையை வழிபட்டு செல்வது வழக்கம். அதேபோல ஆண்டு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று ( 29.08.2023 ) மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காகவும், ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, மும்பை, கோவா, போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5-45 மணியளவில் பேராலய முகப்பிலிருந்து கொடி ஊர்வலம் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் ஆகியோர் கொடியை புனிதம் செய்து வைக்க கொடியேற்று விழா நடைபெறுகிறது. பின்னர் பேராலய கலை அரங்கத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் மாதா குளம் ஆலயம், விண்மீன் ஆலயம், பேராலயம் மேல்புறம் மற்றும் கீழ்புற கோவில்கள் ஆகியவற்றில் நாள்தோறும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. நாள்தோறும் மாலை சிறிய தேர் பவனி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாதாவின் ஆடம்பர தேர்பவனி செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7-30 மணி அளவில் நடக்கிறது.
தொடர்ந்து செப்டம்பர் 8ஆம் தேதி காலை 6 மணி அளவில் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக சிறப்பு ரயில்கள் மற்றும் தமிழக முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவிழாவை முன்னிட்டு நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1
of 918
Comments are closed, but trackbacks and pingbacks are open.