108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகும். இதில், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண் டகம் நிகழ்ச்சியுடன் நாளை (30-12-2024) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (31ம் தேதி) தொடங்குகிறது. அன்றையதினம் காலை 7.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைகிறார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யபிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜுன மண் டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதேபோல பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான வருகிற ஜனவரி 9 ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். 10ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள்
மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரம பதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். மேலும், 11ந் தேதி முதல் 15 நதேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ராப்பத்து 8ம் திருநாளான 17ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 18ந் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 19ந் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறப்பு தினமான 10 ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண் டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து 7ம் திருநாளான 16ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் திருநாளான 17ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10ம் திருநாளான 19 ந் தேதி தீர்த்தவாரியும், 20ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பாசாற்று மறை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுபெறுகிறது.வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது . பக்தர்கள் பாதுகாப்பாக நம்பெருமாளை தரிசனம் செய்ய திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பொன்சேகா மேற்பார்வையில் 1000 த்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கோவில் வளாகத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 955
Comments are closed.