உத்தமர் கோவில் சித்திரை தேராட்டம் நடைபெற்றது. நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து புருஷோத்தம பெருமாள் அனுதினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிந்தா… கோவிந்தா… என்று பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.