Rock Fort Times
Online News

பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலெல்லாம் கடுகடுக்கும் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் – முசிறியில் கருணைராஜாவுக்கு கஷ்ட காலமா ?

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் மகனான என்.எஸ் கருணை ராஜா. பொறியியல் பட்டதாரியான இவர், சொந்தமாக கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் போட்டியிடுகிற முசிறி தொகுதியில் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்களே பெரும்பான்மையாக இருப்பதால், இவரது வெற்றி வாய்ப்பும் பிரகாமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. அனைவரிடமும் யதார்த்தமாக பழகக் கூடியவர், கஷ்ட – நஷ்டங்களில் துணை நிற்கக் கூடியவர். கட்சியினரை மதிக்கத் தெரிந்தவர் என இவருக்கு ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளும் இருக்கிறது. இவரது தந்தையான என்.செல்வராஜின் மறைவிற்குப் பிறகு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கருணை ராஜாவுக்கு, திமுக தலைமை தற்போதைய தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. கிடைத்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கருணை ராஜாவும் தேர்தல் களத்தில் கடினமாகவே உழைக்கிறாராம். ஆனால், முசிறி தொகுதிக்கு புதுமுகமான திமுக வேட்பாளரான இவருக்கு கட்சியினரை அறிமுகம் செய்யவும், பிரச்சாரத்தில் துணை நிற்கவும், முசிறி மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருக்கும் ராமச்சந்திரனை உடனிருக்குமாறு கட்சி உத்தரவிட்டுள்ளது.ஆனால், முழுக்க முழுக்க கடுகடு முகத்துடனேயே காணப்படும் ஒ.செயலாளரான ராமச்சந்திரன், அப்பகுதி திமுக புள்ளிகளை மதிப்பதில்லை. அவர்களுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. மருந்துக்கு கூட சிரிப்பதில்லை. பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் உள்ள மக்கள் குறைகளை வேட்பாளரின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பதில்லை. மொத்தத்தில் கடமைக்கு கூட இருக்கிறாரே தவிர, இவரால் பலன் ஏதுமில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ராமச்சந்திரன் மீது வரிசை கட்டி நிற்கிறது. பண்ணையார் தனத்துடன் நடந்து கொள்ளும் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் போன்றவர்களால், முசிறி தொகுதி திமுக வேட்பாளரான கருணை ராஜாவுக்கு கஷ்ட காலம் தான் என, தொகுதி உடன்பிறப்புகளே காதுக்குள் கிசுகிசுக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்