திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். 2 நாள் பயணமாக நேற்று (ஜனவரி 04) தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுக்கோட்டையில் நடந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள பிரபல ஓட்டலில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 2ம் நாளான இன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். அப்போது வெளியே காத்திருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அவர், மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடக்கும் ‘மோடி பொங்கல் விழா’வில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார். மத்திய அமைச்சர் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Comments are closed.